திருச்சுழி; திருச்சுழி குண்டாற்றில் ஆடித்தபசு விழா நேற்று மாலை நடந்தது. திருச்சுழியில் உள்ள திருமேனிநாதர் சாமி கோயில் ஆடித்தபசு விழா ஜூலை 12 ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு சிம்மம், குதிரை, அன்னம், வெள்ளி, ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 10 ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை திருச்சுழி குண்டாற்றில் தபசு விழா நடந்தது. துணை மாலையம்மன் தபசு மண்டபத்தில் திருமேனிநாதரை அடைவதற்காக தவம் மேற்கொண்டதாகவும், அவர் தவத்தை கண்டு மகிழ்ந்து திருமேனிநாதர் ரிஷப வாகனத்தில் அம்மனுக்கு காட்சி தந்து அம்மனை சாந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் திருமேனிநாதருக்கும் துணைமாலை அம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி திருச்சுழி குண்டாற்றில் நடந்தது. அம்மன் சாமியை 3 முறை வலம் வந்த பின் தீபாராதனை காட்டப்பட்டது.