பதிவு செய்த நாள்
16
நவ
2012
11:11
கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனே ஏற்படுத்த வேண்டும்; இல்லையெனில், திருட்டுச் சம்பவங்களுக்கு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என, இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.கோவில்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து, நவ., 12, "தினமலர் இதழில், "கொள்ளை திருட்டை தடுக்க பாதுகாப்பு படை வலுவாகுமா? என்ற தலைப்பில் விரிவான செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை, கோவில் பாதுகாப்பு குறித்து, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.அவையாவன:
* இரண்டாம் நிலை காவலர்கள், 1,000 பேரில், காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப ஏதுவாக, சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை, தொடர்பு கொள்ள வேண்டும்.
* தற்போது, திருக்கோவில் பாதுகாப்பு படையில் உள்ள, இரண்டாம் நிலை காவலர்களை, கோவில் பணிக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
* பாதுகாப்பு படையில், 3,000 முன்னாள் படை வீரர்களில், எஞ்சியுள்ள பணியிடங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூலம், விரைவில் தேர்வு செய்து, நியமனம் செய்ய கேட்க வேண்டும்.
* கோவில் உள்ள இடங்களில், காவல்துறை மூலம், இரவு நேர ரோந்துப் பணிகளை உறுதி செய்ய, காவல்துறை கண்காணிப்பாளர்களை கேட்டுக் கொள்ள வேண்டும்.
* தேவையான இடங்களில், திருடர் எச்சரிக்கை மணி, கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
* திருடர் எச்சரிக்கை மணி பொருத்தும் போது, அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தானியங்கி மூலம் தகவல் அளிக்கும் வகையில், சாதனங்கள் பொருத்த வேண்டும்.
* கோவில் பணியில் உள்ள இரவு காவலர்களில், காலியிடம் இருப்பின், அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும்.
* மாவட்டந்தோறும் உலோக திருமேனி பாதுகாப்பு மையம் புதிதாக அமைக்க, விரைவு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* பூஜை அல்லாத உலோக விக்கிரங்களை பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்க வேண்டும். பரம்பரை அறங்காவலர் மற்றும் சில கிராமப்புறத் திருக்கோவில்களில் ஆட்சேபணை இருந்தால், அவர்களிடம் நிலைமையை எடுத்துக் கூறி, சமாதானப்படுத்த வேண்டும்.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை இருப்பின், அவர்களிடம், "எவ்வித அசம்பாவித நிகழ்வுக்கும் நாங்களே பொறுப்பு என, எழுத்து மூலம் பெறவும். சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, பாதுகாப்பு குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* பாதுகாப்பு நடவடிக்கைகளில், சார்நிலை அலுவலர்களின் மெத்தனப்போக்கு, இனிவரும் காலங்களில் சகித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. இனி, அசம்பாவிதங்கள் நடந்தால் சம்மந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.