பதிவு செய்த நாள்
02
ஆக
2024
07:08
பல்லடம்; நீண்ட நாட்களாக இழுபறி ஏற்பட்டு வந்த பல்லடம் கடைவீதி மாகாளியம்மன் கோவில் கடைகள் இடித்து அகற்றும் பணி நேற்று துவங்கியது.
பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில், பழமை வாய்ந்த கடைவீதி மாகாளியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், பல நூறு ஆண்டுக்குப் பின் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவில் முன்புறம் உள்ள கடைகளை அகற்றினால் மட்டுமே திருப்பணிகளை மேற்கொள்ள முடியும் என, திருப்பணிக் குழுவினர் வலியுறுத்தி வந்தனர். கடைகளை இடித்து அகற்றுவதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என கடை உரிமையாளர்கள் முறையிட்டனர். இதன் காரணமாக, கடைகளை அகற்றவும், திருப்பணி துவங்குவதிலும் தாமதம் ஏற்பட்டு வந்தது. விதிமுறைப்படி கடைகளை அகற்றிவிட்டு திருப்பணிகளை துவங்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, கடைகளை அகற்றிக் கொள்ள அறநிலையத்துறை கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வாங்கியது. இதன்படி, கடைகள் காலி செய்யப்பட்ட நிலையில், கடைகள் இடித்த அகற்றப்படும் என, கடந்த வாரமே அறிவிக்கப்பட்டது. தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று காலை, அகழ் இயந்திரம் பயன்படுத்தி, கடைகளை இடித்து அகற்றும் பணி துவங்கியது.