தலையில் தேங்காய் உடைத்து சாட்டையடி பெற்ற பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2024 07:08
வடமதுரை; திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி பெற்றும் வினோதமாக நேர்த்திக்கடன் வழிபாடு செய்தனர்.
வடமதுரை அருகே கொல்லப்பட்டி கிராமம் ஜி.குரும்பபட்டியில் மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவு பங்காளிகள் அழைப்புடன் திருவிழா துவங்கியது. நேற்று அதிகாலையில் பாரம்பரிய வழிபாடுகள் முடித்து காலை கோயில் முன்பாக விரதமிருந்த பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் அமர்ந்தனர். பூசாரி லோகநாதன் வழக்கமான பாரம்பரிய வழிபாடுகளை முடித்து நேர்த்திக்கடன் வழிபாட்டிற்காக அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார். பின்னர் சேர்வைகாரர்களிடம் பக்தர்கள் ஒவ்வொரு சாட்டையடி பெற்று கோயிலுக்குள் சென்று வழிபட்டனர். வழிபாட்டின் துவக்கம் முதல் இறுதி வரை பக்தர்களும், குழுமியிருந்தவர்களும் ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என கோஷமிட்டபடி இருந்தனர். விழா ஏற்பாட்டினை கோயில் தலைவர் முருகேசன், செயலாளர் மீர்ராஜ், பொருளாளர் பெருமாள் செய்திருந்தனர்.