பதிவு செய்த நாள்
05
ஆக
2024
07:08
கோத்தகிரி; கோத்தகிரி ஒன்னதலை கிராமத்தில் இருந்து, பழநி முருகன் கோவிலுக்கு, பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
கோத்தகிரி ஒன்னதலை பாதயாத்திரை குழுவினர், ஆண்டுதோறும் பழநி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்று, தங்க தேர் பூஜையில் பங்கேற்று வழிபாடு நடத்துகின்றனர். அதன்படி, நேற்று காலை, 30க்கும் மேற்பட்ட பக்தர்கள், காவடியுடன் புறப்பட்டனர். முன்னதாக, விநாயகர் மற்றும் ஹெத்தையம்மன் கோவில்களில் சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்களை, பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் வழியனுப்பி வைத்தனர். மேட்டுப்பாளையம் விநாயகர் கோவிலில், மாலை, 6:00 மணிக்கு அன்னதானத்தில் பங்கேற்ற பக்தர்கள், இரவோடு இரவாக, அன்னூர் மண்டபத்தில் இரவு தங்கினர். இன்று அதிகாலை புறப்பட்டு, சோமனூர் அய்யன் கோவிலில் தங்குகின்றனர். தொடர்ந்து, குண்டாடம் புத்தர்சல் மண்டபத்தில் ஓய்வெடுக்கும் பக்தர்கள் நாளை இரவு, தாராபுரம் ஆஸ்ரமத்தில் தங்கி, அங்கிருந்து, வியாழக்கிழமை இரவு, பழனி அடிவாரம் அடைகின்றனர். வெள்ளிக்கிழமை மண்டபத்தில் பூஜைகள் நடத்தி, மாலை, 4:00 மணிக்கு, முருகன் கோவிலை சுற்றி கிரிவலம் சென்று, இரவு, 7:00 மணிக்கு மலையேறி, முருகப்பெருமானை வழிபட்டு, தங்க தேரில் பங்கேற்கின்றனர். பாதயாத்திரை பக்தர்களுக்காக, ஆங்காங்கே உபயதாரர்கள் சார்பில், அன்னதானம் மற்றும் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.