வரதராஜ பெருமாள் கோயிலில் கஜேந்திர மோட்சம்; வைகை ஆற்றில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2024 05:08
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் கஜேந்திர மோட்ச விழா வைகை ஆற்றில் கோலாகலமாக நடந்தது.
எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பிரம்மோத்சவம், வசந்த உற்சவ விழா நடக்கிறது. தொடர்ந்து கஜேந்திர மோட்ச திருவிழா குழுவினரால் 2ம் ஆண்டாக கஜேந்திர மோட்ச லீலை வைகை ஆற்றில் நேற்று இரவு நடந்தது. அப்போது மாலை 5:00 மணிக்கு வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் கோயிலில் இருந்து புறப்பாடாகி இரவு 7:00 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கி மண்டகப் படியில் காட்சியளித்தார். தொடர்ந்து அங்கு பக்தர்களுக்கு மத்தியில் கஜேந்திரன் என்ற யானைக்கு மோட்சம் அளிக்கும் விழா நடந்தது. மேள தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் நடந்தது. மேலும் இரவு 10:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து பெருமாள் புறப்படாகி ரத வீதிகள் வழியாக மீண்டும் கோயிலை அடைந்தார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள், விழா குழுவினர் செய்தனர்.