குருவாயூர், பாலக்காட்டில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்; யானைகள் அணிவகுப்பு
பதிவு செய்த நாள்
27
ஆக 2024 10:08
பாலக்காடு; பாலக்காடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கேரள மாநிலத்தில், புகழ்பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கிருஷ்ண ஜெயந்தி விழா துவங்கியது. காலை, 7:00 மணிக்கு, பெருவனம் குட்டன் மாரார் தலைமையிலான, 50க்கும் மேற்பட்ட வாத்திய கலைஞர்கள் செண்டை மேள வாத்தியங்கள் முழங்க, மூன்று யானைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இதில் இந்திரசென் என்ற யானை, உற்சவ மூர்த்தியின் தங்க சிலை ஏந்தி வந்தது. காலை, 9:00 மணி அளவில் கிருஷ்ணர் வேடம் அணிந்த, ஏராளமான சிறுவர், சிறுமியர் பங்கேற்ற ஊர்வலம், மம்மியூர் கோவில் சன்னிதியில் இருந்து புறப்பட்டு, மதியம், கிருஷ்ணர் கோவிலில் வந்தடைந்தது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள், மேல்சாந்தி மதுசூதனன் நம்பூதிரியின் தலைமையில் நடந்தன. பாலக்காடு நகரில் உள்ள குன்னத்துார்மேடு ஸ்ரீ கிருஷ்ணர், பாலமுரளி, இடயார்தெரு கோபாலகிருஷ்ணர், சின்மயா தபோவன குருவாயூரப்பன், பிராயிரி தரவத்துபடி நவநீத கிருஷ்ணர், எலப்புள்ளி நவநீத கோபால கிருஷ்ணர், கண்ணாகுறுச்சி லட்சுமி சமேத மகாவிஷ்ணு, ஒற்றைப்பாலம் பூழிக்குன்னு ஸ்ரீ கிருஷ்ணர், கொல்லங்கோடு பயல்லுானர் ஸ்ரீ கிருஷ்ணர், குழல்மன்னம் மருதுார் ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீகிருஷ்ணபுரம் ஸ்ரீ கிருஷ்ணர், லக்கிடி கொரட்டியில் ஸ்ரீ கிருஷ்ணர், பழம்பாலக்கோடு நாராயணமூர்த்தி, பய்யுருளி ஸ்ரீ கிருஷ்ணர், பட்டாம்பி மேற்கு மடம் குருவாயூரப்பன் கோவில்களில் விழா கொண்டாடப்பட்டது. குன்னத்துார்மேடு கிருஷ்ணர் மற்றும் பாலமுரளி கோவிலில், அலங்கரிக்கப்பட்ட 9 யானைகளில் கிருஷ்ணனின் தங்க சிலை, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பாலக்காடு நகரில் மாலையில், ‘பாலகோகுலம்’ என்ற அமைப்பின் சார்பில் ராதா-கிருஷ்ணர் வேடம் அணிந்த, ஏராளமான சிறுவர், சிறுமியர் பங்கேற்ற ஊர்வலம், சின்மயா தபோவனம் சந்திப்பில் இருந்து புறப்பட்டு, அரசு விக்டோரியா கல்லுாரி, மோயன் மாடல் பள்ளி, தலைமை தபால் அலுவலகம், சுல்தான்பேட்டை, கோர்ட் ரோடு வழியாக கோட்டை வாசலை அடைந்தது.
|