பதிவு செய்த நாள்
30
ஆக
2024
11:08
மதுரை; மதுரை பெருமாள்பட்டி நொண்டிச்சாமி கோயிலில் 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர்களின் திருஆழிக்கல் கண்டெடுக்கப்பட்டது. மதுரை பூசாரிப்பட்டியில் இருந்து நரசிங்கம்பட்டி செல்லும் உள்வட்ட சாலையில் அமைந்துள்ளது பெருமாள்பட்டி. இவ்வூரின்மந்தை பகுதியில் நொண்டிச்சுவாமி கோயில் உள்ளது. கோயிலின் வலது பக்கம் 13ம் நுாற்றாண்டை சேர்ந்த இரட்டை மீன்கள் செண்டு செதுக்கப்பட்டுஉள்ள பிற்கால பாண்டியர்களின் அரசு இலச்சினை பொருந்திய திரு ஆழிக்கல் கண்டறியப்பட்டுள்ளது. அதனை வரலாற்று ஆர்வலர் ராஜசேகர் ஏற்பாட்டில் பேராசிரியர் தேவி, தொல்லியல் துறை ஆய்வாளர் அறிவுச்செல்வம், மதுரை இயற்கை பண்பாடு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தமிழ்தாசன் ஆய்வு செய்தனர்.
தேவி கூறியதாவது: பெருமாள் கோயிலுக்கு தானமாக கொடுத்த நிலத்தின் எல்லையை குறிக்கும் கல் ஆழிக்கல். சிவன் கோயிலுக்கு தானம் கொடுத்த நிலத்திற்கான எல்லையை குறிக்கும் கல் சூலக்கல். இந்த கல் பெருமாள்பட்டியில் இருப்பதால் பிற்கால பாண்டியர்களால் அழகர்கோவிலுக்கு தானமாக கொடுத்த நிலத்தின் எல்லை கல்லாக இருக்கலாம். இதில் கல்வெட்டு செய்தி எதுவும் இல்லை என்றார். இந்த திருஆழிக்கல் 3 அடி உயரம், 1 அடி நீளம், அரை அடி அகலம் கொண்டது. செவ்வக பலகைக் கல்லின் நான்குபுறமும் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. அதில் ஆழிக்கல்லின் இரண்டு புறங்களில் இரண்டு மீன்கள் செண்டு, நடுவில் சக்கரம் செதுக்கப்பட்டுஉள்ளது. மதுரையில் பெருமாள் கோயிலுக்கு நிலதானம் அளித்த திரு ஆழிக்கற்கள் கப்பலுார், நரசிங்கம்பட்டி, சின்ன இலந்தை குளம், அந்தநேரி, மலையாளத்தான்பட்டியில் கண்டறியப்பட்டுள்ளது.