பதிவு செய்த நாள்
30
ஆக
2024
11:08
பெங்களூரு; திருமலை ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், மீண்டும் நந்தினி நெய் சப்ளையை துவங்கியுள்ளது.
திருப்பதி – திருமலை ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க, பல ஆண்டுகளாக கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், நந்தினி நெய் வினியோகித்து வந்தது. நெய் விலையை குறைத்து தரும்படி, திருமலை – திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்தது. இதற்கு கே.எம்.எப்., சம்மதிக்கவில்லை. ‘சுவை, தரத்தில் நந்தினி நெய் உயர்தரமானது. எந்த காரணத்தை கொண்டும், விலையை குறைப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை’ என, திட்டவட்டமாக கூறிவிட்டது. இது தொடர்பாக, பல சுற்று பேச்சு நடந்தது. கே.எம்.எப்., பிடிவாதத்தை தளர்த்தவில்லை. எனவே தேவஸ்தானம் நிர்வாகம், நெய் வினியோகிக்கும் டெண்டரை, வேறு நிறுவனத்துக்கு கொடுத்தது. மூன்று ஆண்டுகளாக கே.எம்.எப்.,பிடம் நெய் வாங்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து, மீண்டும் நந்தினி நெய் வாங்குவதற்கான பேச்சு நடந்தது. இதில், சுமுக முடிவு எட்டப்பட்டது.
இந்நிலையில், நந்தினி நெய்யை ஏற்றி திருமலைக்கு புறப்பட்ட டேங்கர் லாரியை முதல்வர் சித்தராமையா, நேற்று முன்தினம் கிருஷ்ணா இல்லத்தில் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இது குறித்து, கே.எம்.எப்., நிர்வாக இயக்குனர் ஜெகதீஷ் கூறியதாவது: திருமலையில் லட்டு தயாரிக்க, முன்பு நந்தினி நெய் பயன்படுத்தப்பட்டது. சில காரணங்களால் மூன்று ஆண்டுகளாக நெய் வினியோகிப்பது நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் நெய் சப்ளை செய்யும்படி, கோரிக்கை வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது முதல் கட்டமாக, ஒரு டேங்கரில் 20,000 லிட்டர் நெய் அனுப்பி வைத்தோம். வரும் வாரம் மூன்று முதல் நான்கு டேங்கர்களில், நெய் அனுப்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.