பதிவு செய்த நாள்
30
ஆக
2024
05:08
மாமல்லபுரம்; காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் மற்றும் செஞ்சிக்கோட்டை ஆகியவற்றை, சர்வதேச பாரம்பரிய நினைவுச் சின்னமாக அங்கீகரிக்க, யுனெஸ்கோ அமைப்பிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின்கீழ், யுனெஸ்கோ எனப்படும் கல்வி மற்றும் கலாசார அமைப்பு இயங்குகிறது. உலக நாடுகளில், பண்டைய கலை, கலாசாரம், சரித்திரம் ஆகியவற்றை உணர்த்தும் முக்கிய பாரம்பரிய நினைவுச் சின்னங்களை, சர்வதேச பாரம்பரிய நினைவுச் சின்னமாக வகைப்படுத்தி அங்கீகரிக்கிறது. ஒவ்வொரு நாடும், யுனெஸ்கோ அங்கீகாரம் கோரும் நினைவுச் சின்னங்களை, அதற்கான சர்வதேச தொல்லியல் அறிஞர் குழுவினர் பார்வையிடுவர். யுனெஸ்கோ அமைப்பு வரையறுத்துள்ள பல்வேறு விதிமுறைகளுக்கு, பாரம்பரிய சின்னம் உட்பட்டுள்ளதா, பாரம்பரிய பழமைத் தன்மையுடன் பராமரிக்கப்படுகிறதா, சர்வேதேச பயணியர் காணும் வகையில் சிறப்பு பெற்றதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தே, அங்கீகாரம் வழங்குவது குறித்து முடிவெடுப்பர். தமிழகத்தில், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்கள், தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம், தாராசுரம் ஆகிய இடங்களில் உள்ள சோழர் கால சிவபெருமான் கோவில்கள், ஊட்டி மலை ரயில் ஆகியவை, யுனெஸ்கோ அங்கீகாரம் அளிக்கப்பட்ட பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக உள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் கோவில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கோட்டை ஆகியவற்றுக்கு, யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முடிவெடுத்துள்ள தொல்லியல் துறை, இதுகுறித்து யுனெஸ்கோ அமைப்பிடம் பரிந்துரைத்துள்ளது. அத்துறையின் கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஜான்விஜ் சர்மா, தென்மண்டல இயக்குனர் பாடக், சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து ஆகியோருடன், காஞ்சிபுரம், செஞ்சி ஆகிய பகுதிகளில் பார்வையிட்டார்.
இதுகுறித்து, அத்துறையினர் கூறியதாவது: தொல்லியல் துறையிடம் உள்ள காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், செஞ்சிக்கோட்டை ஆகியவற்றுக்கு, யுனெஸ்கோ அங்கீகாரம் பெற பரிசீலிக்கப்படுகிறது. அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைலாசநாதர் கோவில் வளாகத்தில், சுத்திகரிப்பு குடிநீர், நடைபாதை, புல்வெளி, நவீன கழிப்பறைகள், மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை, தனியார் நிறுவன சி.எஸ்.ஆர்., திட்டத்தில் மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.