தேவகோட்டை; தேவகோட்டை காவல் தெய்வமான கோட்டையம்மன் பூர்வீக கோவில் ஆவணி முளைக்கொட்டு திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் இரவு மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தினமும் இரவு ஆண்கள் பெண்கள் கும்மியடித்து முளைக்கொட்டு நடத்தினர். நேற்று முன்தினம் பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிந்து வழிப்பட்டனர். நிறைவு நாளான நேற்று காலை ஏராளமானோர் பால்குடம் எடுத்தும் அலகு குத்தி வேல்காவடி எடுத்து வந்தும் வழிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அபிஷேகம் நடந்தது. மாலையில் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் முளைக்கொட்டு நடத்தினர்.