பதிவு செய்த நாள்
06
செப்
2024
07:09
புதுச்சேரி; வேதபுரீஸ்வரர் கோவிலில் சாம வேத உபாகர்மா நிகழ்ச்சியில் பூணுாலை மாற்றி வேதத்தை ஆரம்பித்தனர்.
ஆவணி மாதத்தில் பவுர்ணமியும், அவிட்டம் நட்சத்திரமும் இணைந்து வர நாளையே ஆவணி அவிட்டமாக கொண்டாடுகிறது. இது வேதங்கள் அவதரித்த நாளாகவும், இந்த நாளில் தான் பெருமாள் ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, வேதங்களை அசுரர்களிடம் இருந்து மீட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. ஆவணி அவிட்டம் அன்று ஏதாவது கோவிலோ அல்லது நீர் நிலைகளுக்கு அருகிலோ வேதம் கற்பவர்கள் ஒரு குழுவாக அமர்ந்து மந்திரம் சொல்லி பூணுாலை மாற்றிக் கொள்கின்றனர். ரிக், யஜூர் வேதங்கள் படிப்பவர்கள் இந்த நாளில் தங்களின் பூணுாலை மாற்றிக் கொள்வார்கள். சாம வேதங்கள் படிப்பவர்கள் விநாயர் சதுர்த்தி அன்றோ, அல்லது முன்போ பூணுால் மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளது.
இந்நிலையில் சாம வேத உபாகர்மா (அவணி அவிட்டம்) புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் கீதா சங்கர் சாஸ்திரிகள், கீதா ராம் சாஸ்திரிகள் தலைமையில் காலை 10:00 மணிக்கு நடந்தது. மகா சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சவ்யம், பிரம்ம யக்ஞம், ரிஷி பூஜை, தர்ப்பணம், கண பூஜையுடன் ஆவணி அவிட்டம் நடந்தது. நிகழ்ச்சியில், அரிசி, தேங்காய், புஷ்பம், பழம், வெற்றிலை பாக்கு, நெய், எள், பஞ்சபாத்திர உத்தரணியுடன் பங்கேற்றனர். தொடர்ந்து வேத ஆரம்பம் நடந்தது. வேதங்களை கற்றவர்கள் பூணுால் மாற்றி தங்களை புதுப்பித்துக் கொண்டனர். புதிதாக வேதம் கற்பவர்களும் வேதத்தை படிக்க துவங்கினர். முன்னோர்களையும் நினைவு கூர்ந்தனர்.