தஞ்சை பெரியகோவிலில் மராட்டிய கால விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2024 06:09
தஞ்சாவூர், – உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழனால் 1010-ம் ஆண்டு கட்டப்பட்டது. பெரியகோவில் வளாகத்தில் மராட்டியர் ஆட்சியில் இரண்டாம் சரபோஜி மன்னரால் 5 அடி உயரத்தில் பிரமாண்ட தோற்றத்துடன் கூடிய விநாயகர் சிலையுடன் சன்னதி அமைக்கப்பட்டது. இது மராட்டா விநாயகர் என்று அழைக்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியை, முன்னிட்டு மராட்டா விநாயருக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சந்தனத்தை கொண்டு விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி போன்றவை வைத்து படைக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் பெருவுடையார் சன்னதியின் அருகே உள்ள இரட்டை விநாயகருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.