பதிவு செய்த நாள்
08
செப்
2024
12:09
திருச்சி; திருச்சி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், விநாயகர் சதுர்த்தியான நேற்று, 150 கிலோ எடையில் கொழுக்கட்டை படையல் செய்து, வழிபாடு நடந்தது.
திருச்சி, மலைக்கோட்டை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலைமீது உச்சிப் பிள்ளையாரும் எழுந்தருளி உள்ளனர். இங்கு, ஆண்டுதோறும் 10 நாட்கள், விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படும். விநாயர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மலைக்கோட்டை கோவிலில், பச்சரிசி மாவு வெல்லம், பாசிப்பருப்பு, தேங்காய், நெய், ஏலக்காய் கலந்து 150 கிலோ எடையில், மெகா கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது. நேற்று, மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையார் ஆகிய சுவாமிகளுக்கு கொழுக்கட்டை படையல் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று காலை, அடிவாரத்தில் எழுந்தருளிய மாணிக்க விநாயகருக்கு, 75 கிலோ கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, 75 கிலோ கொழுக்கட்டை துாளியில் கட்டி, மலை மீது உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த கொழுக்கட்டை, உச்சிப்பிள்ளையாருக்கு படையலிட்டு, நெய்வேத்தியம் செய்த பின், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா நாட்களில் மாலை, மாணிக்க விநாயகர் உற்சவர் பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர் கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி ஆகிய சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி தருவார். நிறைவு நாளில் உற்சவர் விநாயகருக்கு திரவிய அபிேஷகம் நடைபெறும்.