பதிவு செய்த நாள்
08
செப்
2024
03:09
திருப்போரூர்; திருப்போரூர் அடுத்த வெண்பேடு கிராமத்தில், மலையின் மீது, 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலபைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது.
அதை முன்னிட்டு, கடந்த 6ம் தேதி கணபதி, நவக்கிரக ஹோமங்கள், கோ பூஜை நடந்தது. அன்று மாலை முதல்கால் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று விக்னேஷ்வர பூஜை, இரண்டாம் கால மற்றும் மூன்றால் கால பூஜைகள் நடந்தன. இன்று காலை 6:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜைகளும் பூர்ணாஹுதி தீபாராதனையும் நடந்தன. காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, கோவிலை வலம் வந்தது. கால பைரவர், விநாயகர் சுவாமிகளின் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதலுடன் அன்னதானம் நடைபெற்றது. விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.