பதிவு செய்த நாள்
14
செப்
2024
11:09
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில் கொள்ளாபுரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே, நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜய்குமார் கூறியதாவது: கூரம் கிராமத்தில், 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இந்த நடுகல், போர் படை தளபதியின் நடுகல். போர் படை தளபதியின் வலது மற்றும் இடது புறங்களில், இரு மனைவியர் உள்ளனர். மேலும், இந்த நடுகல்லில் இருக்கும் முகங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இருப்பினும், மூவரின் உடலில் ஆபரணங்களை காண முடிகிறது. குறிப்பாக, நடுகல்லில் இருக்கும் போர் படை தளபதியின் வலது கரத்தில் ஆயுதம் உள்ளது. வலது மற்றும் இடது புறம் இருக்கும் மனைவியரின் சிற்பங்களில், இடுப்புக்கு கீழே மடிப்புடன் கூடிய, ஆடை மற்றும் இடது புறத்தில் சாய்ந்த கொண்டையும், கைகளில் ஆபரணங்கள் மற்றும் பூ செண்டுகளை காண முடிகின்றன. இந்த சிலைகளின் அமைப்புகளை வைத்து பார்க்கும் போது, 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சிற்பம் என அறிய முடிகிறது. மேலும், இந்தப் பகுதியில் பல்லவர் காலத்தில் உருவாக்கிய வித்யா வினீத பல்லவ பரமேஸ்வர சிவன் கோவில் உள்ளது. அதேபோல், ஆதிகேசவ பெருமாள் கோவிலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து, இந்த நடுகல்லை மீட்டு பாதுகாக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.