பதிவு செய்த நாள்
14
செப்
2024
05:09
ஸ்ரீகாளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று (13.9.2024) முதல்ஐந்து நாட்களுக்கு ஆண்டு தோறும் நடைபெறும் பவித்ரோற்சவம் சாஸ்திர முறைப்படி துவங்கியது. பரத்வாஜ மகரிஷி , பாம்பு, யானை, சிலந்தி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது.
காளஹஸ்தி தேவஸ்தானத்தில் வீற்றிருக்கும் ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மற்றும் பரிவார (துணை) சன்னதிகளில் உள்ள மற்ற தெய்வங்களுக்கு ஆண்டு முழுவதும் நடைபெறும் நித்ய (நைமித்யக) பூஜைகளிலும், திருவிழாக் காலங்களில் ஏற்படும் தோஷங்களைத் தடுக்கவும், உற்சவ மூர்த்திகளுக்கு சக்தி அளிக்கவும், பவித்ர உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் நேற்று பவித்ர உற்சவம் சிறப்பாக துவங்கியது. ஐந்து நாள் நடைபெறும் விழாவில் முதல் நாளான நேற்று கோயில் வளாகத்தில் உள்ள யாகச் சாலையில் வேத பண்டிதர்கள் மற்றும் கோவிலின் தலைமை அர்ச்சகர் தலைமையில் கலச ஸ்தாபன பூஜை நடைபெற்றது. பின்னர், மகரிஷி பரத்வாஜர், ( ஸ்ரீ - சிலந்தி, காள - பாம்பு, ஹஸ்தி - யானை) போன்ற உற்சவ மூர்த்திகளை குரு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பால், தயிர், விபூதி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு திரவியங்களால் வேத முறைப்படி சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது . விழாவில் ஸ்ரீகாளஹஸ்தி எம்எல்ஏ பொஜ்ஜல. சுதிர் ரெட்டி மற்றும் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டு ஸ்ரீகாளஹஸ்தி நகரில் நான்கு மாட வீதிகளில் மேள தாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.