சபரிமலை; சபரிமலையில் திருவோண பூஜைகள் தொடங்கியது. இன்று மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி சார்பில் பக்தர்களுக்கு ஓண விருந்து அளிக்கப்பட்டது
திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று (13ம் தேதி) மாலை 5:00 க்கு திறக்கப்பட்டது. அன்று பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10:00 க்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி பிரம்மதத்தன் ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்திய பின்னர் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திருவோண சிறப்பு பூஜைகள் தொடங்கியது. கேரளாவில் தலை ஓணம் என்று அழைக்கப்படும் உத்திராட ஓணத்தையொட்டி மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி சார்பில் பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்பட்டது. இதனை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நாளை திருவோணம் நாளில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்கள் சார்பில் பக்தர்களுக்கு ஓணவிருந்து வழங்கப்படுகிறது. நாளை மறுதினம் போலீஸ் துறை சார்பில் ஓண விருந்து வழங்கப்படும். அத்தப் பூக்களம் அமைக்கப்பட்டிருந்தது. ஐயப்பன் விக்ரகத்தில் மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து பூஜைகள் நடைபெறுகிறது. திருவோண பூஜைகளுக்கு பின்னர் தொடர்ந்து புரட்டாசி மாத பூஜைகளும் நடைபெற்று 22ம் தேதி இரவு நடை அடைக்கப்படும். சபரிமலையில் பக்தர்களின் சார்பில் களபாபிஷேக வழிபாடு நடைபெறுகிறது. இதற்கான அரைத்த சந்தனம் வெளியில் இருந்து கொண்டுவரப்பட்டு வந்தது. தற்போது தேவசம்போர்டு சார்பில் சந்தனம் அரைக்கும் இயந்திரம் சபரிமலை நிறுவப்பட்டுள்ளது. இதனை தேவசம்போர்டு தலைவர்பிரசாந்த் தொடங்கி வைத்தார்.