திருநங்கைகள் கட்டிய அங்காளம்மன், கருப்பனார் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2024 11:09
நாமக்கல்; ராசிபுரம் அருகே திருநங்கைகளின் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான திருநங்கைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாங்கவுண்டம்பட்டி பனந்தோப்பில் எழுந்தருளியுள்ள திருநங்கைகளின் சார்பில், அங்காளம்மன், கருப்பனார் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் முன்னதாக ஆவணி 21ம் தேதி முகூர்த்த கால் நடப்பட்டு, ஆவணி 30ம் தேதி கோபுர கலசங்களுக்கு காவேரி ஆற்றில் இருந்து தீர்த்த குடங்கள், முளைப்பாரி ஊர்வலமானது சென்றது. இந்த நிலையில் இன்று (16ம் தேதி) அதிகாலை 4.30 மணி அளவில் ரஷசா பந்தனம், 2 கால யாக பூஜைகள், நாடி சந்தனம் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்று, இறுதியாக திருநங்கைகள் கோவிலான அங்காளம்மன், கருப்பனார் கோவில் கோபுரங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை காண சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.