பதிவு செய்த நாள்
16
செப்
2024
11:09
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், பவித்ரோத்ஸவ விழா நடக்கிறது.
ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம விதிகளின் படி, கோவில்களில் அவசியமாக மேற்கொள்ள வேண்டிய நித்திய பூஜைகள், வழிபாட்டு முறைகள், விழாக்களில் ஏற்படும் குறைபாடுகளால் ஏற்படும் தோஷங்களிலிருந்து நிவர்த்தி கிடைக்க, பவித்ரோதத்ஸவ உற்சவம் நடத்தப்படுகிறது. இந்த பூஜையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, தீர்க்காயுள், செல்வம், ஞானம், ஆரோக்கியம் உள்ளிட்ட பலன்கள் கிடைப்பதாக கருதப்படுகிறது. உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், பவித்ரோத்ஸவ உற்சவ விழா, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, யாக சாலை பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து, வேத திவ்ய பிரபந்தம், திருமஞ்சனம், அதிவாச ேஹாமம் நடந்தது. நேற்றுமுன்தினம் காலை, 8:00 மணிக்கு, சுவாமிகளுக்கு திருமஞ்சனம், அலங்காரம், சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம், பவித்ரம் சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, ஹோமம், சதுஸ்தான அரச்சனம், சாற்று முறை நடந்தது. மேலும், புலவர் குரு சுபாசு சந்திரபோசு எழுதிய தித்திக்கும் திருப்பாவை நுால் வெளியீட்டு விழா நடந்தது. இன்று (16ம் தேதி), காலை, 8:00 மணிக்கு, சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம், மாலை, 5:00 மணிக்கு, நிறைவேள்வி, மாலை, 7:30 மணிக்கு, பவித்ரம் மாலை கலைந்து திருமஞ்சனம், இரவு, 8:00 மணிக்கு, சுவாமிகளுக்கு திருமஞ்சனம், ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல், மகா நிவேதனம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.