வடமதுரை; வடமதுரை சிங்காரக்கோட்டை அருகே சின்னரெட்டியபட்டியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை வசித்த போயமார் இன மக்கள் ஸ்ரீ ராமர் கோயில் கட்டி வழிப்பட்டனர். கால போக்கில் தொழில் தொடர்பான இடப்பெயர்ச்சியால் போயமார் இன மக்கள் தற்போது யாரும் அங்கு வசிக்கவில்லை. ஆனால் வழித்தோன்றலாக வந்த வாரிசுகள் அவ்வப்போது வழிப்பட்டு சென்றனர். 100 ஆண்டு கோயில் கட்டடம் பழுதானதால், கிராம மக்கள் உதவியுடன் திருப்பணி நடந்து ஸ்ரீ ராமர் கோயில் புதிதாக கட்டப்பட்டது. நேற்றுமுன்தினம் மாலை அரசமரத்தடி விநாயகர் கோயிலில் புனித தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. திருப்பூர் புதுராமகிருஷ்ணபுரம் சக்திவிநாயகர் கோயில் அர்ச்சகர் ராஜலிங்க சிவம் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தினர். முன்னாள் அரசு வழக்கறிஞர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் மோகன், கோயில் தலைவர் மணி, வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், ராஜரத்தினம் உள்பட சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.