பதிவு செய்த நாள்
18
செப்
2024
03:09
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் வெள்ளித் தேர் செய்ய நேற்று 6 கிலோ 206 கிராம் வெள்ளியைஅறங்காவலர் குழுவிடம் உபயதாரர்கள் உபயமாக வழங்கினர்.
நெல்லையப்பர் கோயிலில் புதிய வெள்ளித் தேர் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இதற்கான மரத் தேர் செய்யும் பணிகள் 100 சதவீதம் முடிவடைந்துள்ளன. வெள்ளித் தேர் செய்வதற்காக வெள்ளியை உபயமாக வழங்குபவர்கள் வழங்கலாம் என அறங்காவலர் குழுத்தலைவர் செல்லையா, செயல்அலுவலர் அய்யர்சிவமணி வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் வெள்ளித் தேர் செய்ய உபயதாரர்கள் வெள்ளியை வழங்கி வருகின்றனர். நேற்று புரட்டாசி மாதப்பிறப்பு, பவுர்ணமியை முன்னிட்டு அறங்காவலர் குழுத்தலைவர் செல்லையா சார்பில் 2 கிலோ, காசிமுருகன் சார்பில் ஒரு கிலோ 6 கிராம், கிருஷ்ணமூர்த்தி ஒரு கிலோ, கலா ஜூவல்லர்ஸ், கோமதி ஜூவல்லர்ஸ் சார்பில் தலா ஒரு கிலோ, கண்ணன் சாஸ்திரி 200 கிராம் வெள்ளி என மொத்தம் 6 உபயதாரர்கள் 6 கிலோ 206 கிராம் வெள்ளியை அறங்காவலர் குழுவிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத்தலைவர் செல்லையா, அறங்காவலர்கள் சொனா வெங்கடாச்சலம், உஷாராமன், கீதா பழனி, செல்வராஜ், செயல்அலுவலர் அய்யர் சிவமணி உட்படபலர் கலந்து கொண்டனர்.
450 கிலோவெள்ளி தேவை; நெல்லையப்பர் கோயிலில் வெள்ளித் தேர் உபயதாரர்கள் மூலமாக 460 கிலோவில் ரூ.4.65 கோடியில் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 11 கிலோ வெள்ளி உபயதாரர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. பொதுமக்கள், பக்தர்கள் வெள்ளியை உபயமாக வழங்க முன்வர வேண்டும் என அறங்காவலர் குழு அழைப்பு விடுத்துள்ளது.