பதிவு செய்த நாள்
18
செப்
2024
04:09
ஸ்ரீவைகுண்டம்; நவதிருப்பதிகளில் முதல் ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பவித்ரோத்ஸவ வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது, தினமும் பெருமாளுக்கு நடைபெறும் பூஜை முறைகளில் ஏதாவது விடுதல்கள் இருப்பின் அதனைநிவர்த்தி செய்திடும் பொருட்டு பவித்ரோத்ஸவ வழிபாடு நடத்தப்படுகிறது. இதன்படி, கள்ளப்பிரான் சுவாமி பெருமாள் கோயிலில் கடந்த மூன்று தினங்கள் பவித்ரோத்ஸவ வழிபாடுகள் நடைபெற்றது. வழிபாட்டின் கடைசி நாளான நேற்று காலைபெருமாளுக்கு விஸ்வரூபம், திருமஞ்சனம் மற்றும் சிறப்பு ஹோமத்துடன் நாலாயிர திவ்யபிரபந்த சேவை நடந்தது. தொடர்ந்து, மாலையில், சாயரட்சையுடன் உற்சவர் கள்ளப்பிரான் சுவாமி தாயார்கள் ஸ்ரீதேவி பூதேவியர்களுடன் புறப்பாடு நடந்தது. இதில், அர்ச்சகர்கள் வாசு, ரமேஷ், நாராயணன், ராமானுஜன், சீனு, ஸ்தலத்தார்கள் ராஜப்பாவெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், வேங்கடகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர் லட்சுமி உட்படபலர் கலந்து கொண்டனர்.