பதிவு செய்த நாள்
19
செப்
2024
04:09
பெரியகுளம்; அரசியலில் தடைகளை தகர்த்தெறிந்து, மீண்டும் பிரகாசிக்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வன், மகன் ஜெயபிரதீப்புடன் மெகா யாகபூஜை, திருவாசக முற்றோதுதல் சிவன், பெருமாளுக்கு திருக்கல்யாணம் என பூஜைகள் நடத்தி வருகிறார்.
பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டருகே தனது இடத்தில் பிரமாண்டமான பந்தலிட்டு, தனது மகன் ஜெயபிரதீப் குடும்பத்தினருடன் இன்று காலை கோபூஜையுடன், மெகா கணபதி ஹோமம் நடத்தினார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்ற திருவாசகம் முற்றோதுதலும், மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. காலை முதல் இரவு வரை சிவனடியார்கள், கட்சியினர், தொண்டர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நாளை (செப்.20) இரண்டாம் நாளாக லட்சுமி சுதர்சன ஹோமம் பூஜை, திவ்ய பிரபந்த பாராயணமும் மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மெகாயாக பூஜை நடத்த என்ன காரணம்: உலக நன்மைக்காக யாகபூஜை என கூறப்பட்டாலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஜெ., வுக்கு அடுத்ததாக நம்பர் 2 வாக இருந்தார். இதன் பலனாக ஜெ., இக்கட்டான சூழலில் ஜெ., வால், இருமுறை முதல்வரானார். விசுவாசமான முதல்வர் என ஜெ., புகழாரம் சூட்டினார். ஜெ., மறைவுக்குப் பிறகு 3 ம் முறையாக முதல்வரானார். அதனையடுத்து ஜெ., தோழி சசிகலா ஆதரவினால் பழனிசாமி முதல்வரானார். அடுத்தடுத்து அரசியல் நகர்வில் பழனிசாமி கை ஓங்கியது. அவரது ஆட்சியில் துணை முதல்வரானார். கட்சியில் பொதுச்செயலாளர் பதவியால் ஏற்பட்ட பிரச்னையால் பன்னீர்செல்வத்திற்கு தடைகள் ஏற்பட்டது. லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட பன்னீர்செல்வம் வெற்றி வாய்ப்பை இழந்து, இந்தியா அளவில் சுயேச்சை வேட்பாளர்களில் அதிக ஓட்டுகளை பெற்றார். வரும் சட்டசபை தேர்தலில் பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முன்னாள் முதல்வர் ஜெ., ஆட்சி அமைக்க வேண்டும் என பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார். இதற்காக அரசியல் தடைகளை தகர்த்தெறிந்து மீண்டும் பிரகாசிக்க யாக பூஜைகள் நடத்துவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.