பதிவு செய்த நாள்
19
செப்
2024
05:09
கொச்சி, கேரளாவின் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் நடைப்பந்தலில் தனி நபர்கள் வீடியோ எடுக்க கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தின் குருவாயூரில் உலக பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலின் முன்புறம் வெயில் மற்றும் மழையில் இருந்து பக்தர்களை பாதுகாக்க, குருவாயூர் தேவசம்போர்டு சார்பில் நடைப்பந்தல் எனப்படும் கூடாரம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் 15ல் பெண் ஓவியர் ஒருவர், நடைப்பந்தலில் கேக் வெட்டி தன் பிறந்த நாளை கொண்டாடியதுடன், வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களிலும் பதிவேற்றினார். இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி இரண்டு பக்தர்கள், கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள், நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், பி.ஜி.அஜித்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 13ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பக்தர்கள் தரப்பில் முன்வைத்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
குருவாயூர் கிருஷ்ணர் கோவில் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள நடைப்பந்தல், பிறந்த நாள் கேக் வெட்டுவதற்கான இடமல்ல; இக்கோவிலில் குருவாயூரப்பனை முறையாக பக்தர்கள் வழிபட உரிய வசதிகளை செய்து தருவது, குருவாயூர் தேவசம் நிர்வாகக் குழுவின் கடமை. எனவே, குருவாயூர் கோவில் நடைப்பந்தல் வளாகத்தில் திருமண நிகழ்வுகள் மற்றும் பிற மத சடங்குகள் தொடர்பாக வீடியோ எடுக்க அனுமதிக்க முடியாது. இதேபோல், கோவிலின் உட்புறத்திலும் வீடியோ எடுக்க அனுமதிக்க முடியாது. பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், எந்தவொரு செயலும் நடைபெறாமல் இருப்பதை தேவசம் பாதுகாப்புக் குழு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.