நாகப்பட்டினம்; நாகையில் பிரசித்திப் பெற்ற குமரன் கோவில் அழகை பல ஆண்டுகளாக மறைத்திருந்த கடையை அதிரடியாக அறநிலைத்துறையினர் அகற்றினர். நாகை நகரின் மத்தியில் மிக பழமையான குமரன் கோவில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இக்கோவிலில், மயிலுக்கு பதிலாக யானை வாகனத்துடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். கோவிலின் கிழக்கு வாயிலில், நாலுகால் மண்டபம் எதிரில், கோவிலின் கலையழகு மற்றும் முகப்பு தோற்றத்தை சீர்குலைக்கும் வகையில், தனியாரால் 237 ச.அடி பரப்பளவில், 50 ஆண்டுகளுக்கு மேலாக பெட்டிக்கடை மற்றும் குளிர்பானங்கள் கடை இயங்கி வந்தது. கோவிலின் கலையழகை மறைக்கும் கடையை அகற்றக் கோரி, பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ஹிந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் ராணி தலைமையில், போலீசார் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரம் மூலம் கடை அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் அறநிலையத் துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.