பதிவு செய்த நாள்
21
செப்
2024
08:09
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ராஜராஜ சோழனின் 5வது மனைவியான பஞ்சவன்மாதேவி என்பவரின் பள்ளி படைகோவிலாகும். பஞ்சவன்மாதேவி தனது கணவரான ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் மீது மிகுந்த பாசம் கொண்டு தனது சொந்த மகனாக வளர்த்து வந்தார். பஞ்சவன்மாதேவி எங்கு தனக்குக் குழந்தைகள் பிறந்தால் ஆட்சி பீடத்திற்குப் போட்டிக்கு வந்து விடும் என்பதற்காக, தனக்கு குழந்தை பிறக்கக் கூடாது என மூலிகையை குடித்து தன்னை மலடாக்கிக் கொண்டார். இந்த தியாகத்தை செய்த பஞ்சவன்மாதேவியான தனது சிற்றன்னையினை நினைவாக, தான் மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவிலை ராஜேந்திர சோழன் அமைத்தார்.
இத்தகையை பெருமைக்கொண்ட கோவிலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்யவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை கடந்த 1924ம் ஆண்டு மத்திய தொல்லியல்துறையால் படியெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 100 ஆண்டுகள் கடந்த நிலையில், மத்திய தொல்லியல்துறையால் படியெடுக்கப்பட்ட கல்வெட்டு ஆவணங்களின் அடிப்படையில், தமிழக கல்வெட்டு துறை சார்பில், படியெடுத்து ஆவணப்படுத்த திட்டமிட்டது. அதன்படி நேற்று தமிழ்நாடு தொல்லியல் துறையின் கீழ் இயக்கும் கல்வெட்டியில் துறையை சேர்ந்த ஜோதி, ஞானப்பிரகாசம், மகாராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கல்வெட்டு படியெடுக்கும் பணியை துவங்கினர். இப்பணிளை பட்டீஸ்வரம் கோவில் செயல் அலுவலர் ஆறுமுகம், புலவர் செல்வசேகர், கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்க தலைவர் கோபிநாத் ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: மத்திய தொல்லியல்துறை ஏற்கனவே படியெடுத்த கல்வெட்டு ஆவணங்களை அடிப்படையாக கொண்டும், தற்போது கல்வெட்டு துறை மூலம் கிடைக்கும் தரவுகளையும் ஒப்பிட்டு பார்க்க உள்ளனர். பிறகு, படியெடுத்து கிடைக்கப்பெற்ற வரலாற்றை புத்தகமாக அச்சடிக்க அரசு திட்டமிட்டுள்ளது இவ்வாறு தெரிவித்தனர்.