பதிவு செய்த நாள்
28
செப்
2024
10:09
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு புரட்டாசி சனியில் மாவிளக்கு நேர்ச்சை செய்வது சிறப்பு. ஏகாதசி விரதம், முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய மனக்குழப்பம் நீங்கும். இன்று வீட்டில் பெருமாள், துளசி மாடத்தை வழிபடுதல் சிறந்த பலன் தரும்.
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்," என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.
இன்று ஏகாதசி; எமதர்மன் ஒருமுறை பெருமாளைச் சந்தித்தான். கருடவாகனத்தில் தனது உலகமான எமலோகத்திற்கு எழுந்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மகாவிஷ்ணுவும் ஒப்புக்கொண்டு வந்தார். அவரை எமதர்மன் மகிழ்ச்சியோடு வரவேற்றான். எமலோகத்தின் தெற்கு திசையில் இருந்து அழுகையும், கூக்குரலும் கேட்டது. குரல் கேட்ட திசை நோக்கி நடந்தார் பெருமாள். அங்கே, பாவிகள் சித்ரவதை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அன்று ஏகாதசி திதி. இன்று ஏகாதசி ஆயிற்றே! என்று வாய்விட்டு சொன்னார். அந்த நிமிஷமே அவர்களின் பாவம் அனைத்தும் நீங்கிவிட்டது. ஏகாதசி என்று சொன்னாலே பாவம் தீரும் என்றால், ஏகாதசி விரதமிருந்து பெருமாள் கோயிலுக்குப் போய் வந்தால் எவ்வளவு புண்ணியம் சேரும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இன்று வீட்டில் மாவிளக்கு ஏற்றி வழிபட ஏழுமலையானே நம் வீட்டிற்கு வருவதாக ஐதீகம்.