பதிவு செய்த நாள்
01
அக்
2024
11:10
திருப்பதி; திருமலை கோயிலில் பாரம்பரிய கோயில் தூய்மைப் பணியான கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று (1ம் தேதி) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இது குறித்து செயல் அலுவலர் ஜே சியாமளா ராவ் கூறியதாவது; அக்டோபர் 4 முதல் 12 வரை திட்டமிடப்பட்ட வருடாந்திர பிரம்மோத்ஸவங்களைக் கருத்தில் கொண்டு இந்த தனித்துவமான திருமஞ்சனம் நடத்தப்பட்டது. வழக்கமாக இது நான்கு முறை அனுசரிக்கப்படுகிறது. திருமலை கோவிலில் தெலுங்கு உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாக்களுக்கு முந்தைய ஆண்டு செவ்வாய்கிழமை நடைபெறும். அதன் ஒரு பகுதியாக கோயில் வளாகத்தின் சுவர்கள், கூரைகள், தூண்கள் என அனைத்து பகுதிகளிலும் பரிமளம் என்ற சிறப்பு நறுமண கலவை பூசப்பட்டு கோயில் முழுவதும், தெய்வங்கள், பூஜை பாத்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டன. முழு நடவடிக்கையும் காலை 6 மணி முதல் 10 மணி வரை நடந்தது. இதன் போது பிரதான தெய்வம் வெள்ளை வேட்டியால் மூடப்பட்டு, துப்புரவுப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து மூடி அகற்றப்பட்டது. பின்னர், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் நைவேத்தியங்கள் வழங்கப்பட்டன என கூறினார். பகல் 12 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு, இன்று செவ்வாய்க்கிழமை அஸ்ததள பாத பத்மாராதனை, விஐபி இடைவேளையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள் வெங்கையா சௌத்ரி, ஸ்ரீமதி கௌதமி, ஸ்ரீதர், லோகநாதம், பீஷ்கர், ராமகிருஷ்ணா மற்றும் பிற அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.