மகாளய அமாவாசை வழிபாடு; பேரூர் நொய்யலில் திரண்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2024 09:10
பேரூர் : பேரூர் நொய்யல் படித்துறையில் மகாளய அமாவாசை வழிபாடு இன்று அக் 2 நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திதி கொடுத்தனர்.
மகாளயம் என்பது இறந்த பிதுர்கள் தங்களுடைய மூதாதையர்களோடு ஒன்று சேர்வதாக ஐதீகம். மகாளய அமாவாசையில் பிதுர்களுக்கு திதி கொடுத்து,தர்ப்பணம் செய்வது ஆகம வேத புராணகால அறிவுரை. இறந்தவரது பெயரில், முக்தி தலமாகிய நொய்யல் காஞ்சி மாநதியில் திதி கொடுத்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மகாளய அமாவாசை என்பதால்,இன்று காலை 6.00 மணியிலிருந்தே நொய்யல் படித்துறைக்குபக்தர்கள் வரத்துவங்கினர். இறந்துபோன மூதாதையர்களை நினைத்து காய்கறிகள், அரிசி, எள், பழம், சமையல் பொருட்களை வைத்து திதி கொடுத்து தர்ப்பண வழிபாடு நடத்தினர். பின், ஆற்றங்கரை விநாயகர் கோவில், சப்தகன்னிமார் கோவில்களில் வழிபட்டனர். இறுதியாக, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நெய்தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். பேரூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால், படித்துறையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.