பதிவு செய்த நாள்
02
அக்
2024
09:10
மகாளய அமாவாசையான இன்று முன்னோரை வழிபடுவர். இது குறித்து காஞ்சிப் பெரியவர் சொல்வதைக் கேட்டால் இதன் மகத்துவம் புரியும். மனிதராகப் பிறந்த அனைவரும் தங்களுடைய முன்னோருக்கு நன்றி தெரிவிப்பது அவசியம். முன்னோர்களை திருவள்ளுவர், தென்புலத்தார் எனக் குறிப்பிடுகிறார். இவர்களை வழிபடுவது நம் கடமை என்கிறது திருக்குறள். பிதுர்களான தாய், தந்தையர், மூதாதையர் ஆகியோருக்குரிய கடமையை நாம் செய்தாக வேண்டும். மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ என்று வேத மாதாவும் பெற்றோரை வழிபட வழிகாட்டுகிறாள். அவ்வை பாட்டியும், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று வேத சாரத்தை பிழிந்து கொடுத்திருக்கிறார்.
வாழும் காலத்தில் பெற்றோரை பணிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். பெற்றோர் செய்த உதவிக்கு ஈடாக ஏதும் நம்மால் செய்ய முடியாது என்பதை உணரவும் வேண்டும். அவர்களின் காலம் முடிந்த பிறகு செய்யும் பித்ரு காரியம் செய்வதில் தான் அனேகம் பேருக்கு சந்தேகம் எழுகிறது. எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே தான் இருக்கின்றன. பிதுர்கள் மறுபிறவி எடுத்து விட்டதாக சொல்கிறார்கள். அப்படியிருக்க இது எப்படி சாத்தியம் என்று மனதிற்குள் தோன்றலாம். சாஸ்திரம் விதித்த சட்டப்படி கொடுக்கும் தர்ப்பணத்தை முன்னோரிடம் சேர்ப்பது பிதுர் தேவதைகளின் பொறுப்பு. சிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு செய்வது என பொருள். முன்னோர் மீது நன்றியுணர்வும், சாஸ்திரத்தின் மீது அக்கறையும் கொண்டு தர்ப்பணம் செய்தால் அவர்களின் நல்லாசியால் வாழ்வும் சிறக்கும். இன்று வீட்டில் குலதெய்வத்தை வழிபடுவது சிறப்பானதாகும்.