அன்னூர்; அன்னூர் வட்டாரத்தில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, கோவில்களில் கொலு பூஜை நடந்தது.
மேற்றழை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும் பழமையான அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று நவராத்திரி விழா துவங்கியது. இரவு கொலு வைக்கப்பட்டு கொலு பூஜை நடந்தது. ஓதுவார் திருஞானசம்பந்தர் பண்ணிசை பாடல்கள் பாடினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சொக்கம்பாளையம் செல்வ விநாயகர் கோவிலில், 57வது ஆண்டு நவராத்திரி விழா நேற்று துவங்கியது. மாலையில் கணபதி பூஜை நடந்தது. இரவு நவராத்திரி கொலு பூஜை நடந்தது. பூஜையை தேசிய சேவா சங்கத் தலைவர் தேவராஜன் துவக்கி வைத்தார். இரவு செல்வ விநாயகர் குழுவின் பஜனை நடந்தது. அன்னூர் சின்னம்மன் மற்றும் பெரிய அம்மன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கணேசபுரம், எல்லப்பாளையம், பசூர் உள்ளிட்ட ஊர்களில் நவராத்திரி கொலு வைத்து பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.