பதிவு செய்த நாள்
06
அக்
2024
10:10
திருவொற்றியூர்; திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில் 3ம் தேதி இரவு, கொடியேற்றத்துடன், நவராத்திரி திருவிழா துவங்கியது.
நவராத்திரியின் பத்து நாட்களிலும், உற்சவ தாயார் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி, மாடவீதி உற்சவம் நடைபெறும். அதன்படி, நான்காம் நாளான நேற்று இரவு, அடர் நீல பட்டு உடுத்தி, கவுரி அலங்காரத்தில் எழுந்தருளிய தாயார், மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதே போல், தேரடி, சன்னதி தெருவில் உள்ள, அகத்தீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவிலில், நான்காம் நாள் நவராத்திரி விழாவில், உற்சவ அம்மனுக்கு, கவுரி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருவொற்றியூர் – அஜாக்ஸ், பொன்னியம்மன் கோவிலில், உற்சவ அம்மன், ராஜ ராஜேஸ்வரியாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மணலியில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, திருவுடைநாதர் சமேத திருவுடைநாயகி கோவிலில், நான்காம் நாளில், மூலவர் தாயாருக்கு, மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நவராத்திரி திருவிழாக்களில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.