பதிவு செய்த நாள்
06
அக்
2024
10:10
சூலூர்; வீடுகள் கோவில்களில் நவராத்திரி விழா ஒட்டி, கொலு பொம்மைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன.
நவராத்திரி விழா கடந்த, 3 ம்தேதி துவங்கியது. கோவில்களில் கொலு படிகள் அமைத்து, பொம்மைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. காடாம்பாடி சிவ காளியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல், வீடுகளில் படிகள் அமைத்து , கொலு பொம்மைகள் வைத்து, அம்மன் பாடல்களை பாடி, பெண்கள், சிறுமிகள் வழிபட்டனர். வினோபா நகரில் நடந்த நவராத்திரி பூஜையில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நெசவு தொழிலாளி வீட்டில், பட்டு புழுவில் இருந்து நூல் எடுத்து, சாயமிட்டு, அதை கைத்தறியில் சேலைகளாக நெசவு செய்து, அவற்றை கடையில் விற்பனை செய்வது வரை நடப்பனவற்றை கொலு பொம்மைகளாக வைத்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.