புதுச்சேரி; தர்ம சம்ரக் ஷண சமிதி சத சண்டி ஹோமத்தில், சண்டிகா பரமேஸ்வரி நாராயணி அலங்காரத்தில் அருள்பாலித்தார். புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி உலக அமைதிக்காகவும், அனைத்து மக்கள் நலனுக்காக 5ம் ஆண்டு சத சண்டி ஹோமம், இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் கடந்த 3ம் தேதி துவங்கியது. 4ம் நாளான நேற்று காலை கோ பூஜை, அசுவ பூஜை முடித்து, சத சண்டி ஹோமத்திற்கு, மூலிகை மூலப்பொருட்களை பக்தர்கள் ஏந்தி வந்தனர். சங்கல்ப்பம் செய்த பிறகு ஹோமம் துவங்கியது. யாக குண்டம் எதிரில் சேஷ வாகனத்தில் சண்டிகா பரமேஸ்வரி நாராயணி அலங்காரத்தில் அருள்பாலித்தார். காந்தி வீதி சங்கர வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் பூஜையில் கலந்து கொண்டனர்.மாலை லலிதா சகஸ்ர நாமம் வேத பாராயணம் நடந்தது. தொடர்ந்து, தாருண்யா சுவாமிநாதன் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. வரும் 12ம் தேதி வரை நடக்கும் ஹோமத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி அழைப்பு விடுத்துள்ளது.