பதிவு செய்த நாள்
22
நவ
2012
10:11
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில், மஹா தேரோட்டம் பகல் நேரத்தில் நடத்தப்படும், என, திருவண்ணாமலை கலெக்டர் விஜய்பிங்ளே கூறினார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கார்த்திகை தீப திருவிழாவில், வரும், 24ம் தேதி மஹா தேரோட்டம் நடக்கிறது. அன்று விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மான் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் வீதி உலா வருவர்.கடந்தாண்டு வரை மறு நாள் அதிகாலை, 12 மணி வரை வீதி உலா நடந்தது. இந்தாண்டு நேரத்தில் தேரோட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, அன்று அதிகாலை, 5.45 மணிக்கு விநாயகர் தேர், 6.45 முதல், 7 மணிக்குள் முருகர் தேர், 8 மணிக்கு உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தேர், மாலை 3 முதல், 5 மணிக்குள் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் பராசக்தியம்மன் தேர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி துவங்கும்.கார்த்திகை தீப திருவிழாவினை முன்னிட்டு திருவண்ணாமலை நகரில், ஒன்பது தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. பரணி தீபத்தை காண, 12 ஆயிரம் பேர் அதிகாலை, 2 மணிக்கும், மஹா தீபத்தை காண, 10 ஆயிரம் பேர், 3 மணிக்கும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். 30 இடங்களில் வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் நிறுத்த ஸ்டாண்டு அமைக்கப்பட்டுள்ளது.நகரின் முக்கிய, பத்து இடங்களில் ஆம்புலன்ஸ் வண்டி நிறுத்தி வைக்கப்படும். கிரிவலப்பாதை முழுவதும் குறிப்பிட்ட இடைவெளியில், 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி வைக்கப்படும்.கிரிவலப்பாதை முழுவதிலும் கற்பூரம் ஏற்ற தடை செய்யப்பட்டுள்ளது, மலை மீது ஏறும் பக்தர்கள், எளிதில் தீப்பிடிக்கும் வகையிலான பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீஸ் நண்பர்கள் குழு போல் இந்த ஆண்டு வனத்துறை நண்பர்கள் குழுவினர் உதவியாக செயல்பட உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.