கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் சூரனை வதம் செய்த பின்பு, வேலாயுதசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வேலாயுதசாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம், சொலவம்பாளையம், பகவதிபாளையம், கல்லாங்காட்டுப்புதூர், சிங்கராம்பாளையம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். பின் வேலாயுதசாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. பின்பு மாலை மாற்றும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சஷ்டி குழுவினர் சார்பில் சஷ்டி கவசம் படிக்கப்பட்டது. தொடர்ந்து, கந்த சஷ்டி விழாவில், சஷ்டி குழு சார்பில் நடத்தப்பட்ட சஷ்டி கவசம் படிக்கும் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி கோபண்ண மன்றாடியார் வழங்கினார். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர், செயல்அலுவலர், சஷ்டி குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்திஆகியோர் செய்தனர்.