திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் விழா; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2024 06:10
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் அக். 3ல் துவங்கிய நவராத்திரி விழாவில் கோவர்த்தனாம்பிகை அம்பாள் தினம் ஒரு கொலு அலங்காரத்தில் அருள் பாலித்தார். உச்ச நிகழ்ச்சியாக இன்று மாலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வெள்ளி வில், அம்புடன் தங்க குதிரை வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளினர். சுவாமி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜை நடந்தது. அங்குள்ள வன்னி மரத்தடியில் வில், அம்பு வைக்கப்பட்டு சந்தனம், மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவிய அபிஷேகங்கள், விக்னேஸ்வர பூஜை, வர்ண பூஜை, எட்டு திக்குளிலும் பலி பூஜை முடிந்து சுவாமியின் பிரதிநிதியான சிவாச்சாரியாரிடம் வில், அம்பு வழங்கப்பட்டது. அவர் நான்கு திசைகளிலும் அம்பு எய்தார். தீபாராதனை முடிந்து பக்தர்களின் திருக்கண் மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி சேர்த்தி சென்றார்.