பதிவு செய்த நாள்
12
அக்
2024
05:10
மைசூரு ; உலக பிரசித்தி பெற்ற, 414வது மைசூரு தசரா விழா கோலாகலமாக இன்று நடைபெற்றது. தசரா பண்டிகை மற்றும் அது தொடர்பான விழாக்கள் துவங்குவதை ஒட்டி, மைசூரு நகர் முழுதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் நகரில் குவிந்துள்ளனர். மைசூரை ஆண்ட உடையார் மன்னர் வம்சத்தினர், 1610ல் முதல் முறையாக தசரா விழா கொண்டாடினர். மன்னர்கள் ஆண்ட காலங்களில், அவர்களையே தங்க அம்பாரியில் அமர வைத்து ஜம்பு சவாரி ஊர்வலம் நடத்தப்பட்டு வந்தது. மன்னர் ஆட்சி முடிந்த பின், சாமுண்டீஸ்வரி தேவி சிலையை அமர வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.ஆண்டுதோறும் நவராத்திரியின் ஒன்பது நாட்களும், சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 10வது நாளான இன்று விஜயதசமியில் ஜம்பு சவாரி எனப்படும் யானைகளின் பாரம்பரிய ஊர்வலம் நடைபெற்றது. விஜயதசமி தினமான நேற்று, 750 கிலோ எடையுள்ள, தங்க அம்பாரியில், சாமுண்டீஸ்வரியை, அபிமன்யுவுக்கு யானை சுமந்து வந்தது. தொடர்ந்து, கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களின் சிறப்புகளை விளக்கும் வகையிலான ஊர்திகள் இடம் பெற்றன. இவ்விழாவை காண, கர்நாடகா மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதுவரை இல்லாத அளவில், தசரா விழாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மைசூரு அரண்மனை, வண்ண விளக்குகளால் ஜொலித்தது.