மகிஷனை வதம் செய்து மகிஷாசுரவர்தினியாக குலசை முத்தாரம்மன்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2024 10:10
துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பத்து நாட்கள் தசரா பண்டிகை வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 3 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை செலுத்தும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்தனர்.
அவர்கள் காளி, அனுமன், கிருஷ்ணர், ராமர் மற்றும் குரங்கு, கரடி, சிங்கம், காளி, பிச்சைக்காரன், விலங்குகள் உட்பட பல்வேறு வேடங்களை அணிந்து ஒவ்வொரு ஊரிலும் தசரா குழு அமைத்து தாரை தப்பட்டை மேளம் முழங்க பொதுமக்களிடம் எடுத்த காணிக்கையை அம்மன் உண்டியலில் போட்டு முத்தாரம்மனை வணங்கி வழிபட்டனர். நேற்று இரவுர 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார். இதையடுத்து கடற்கரை மைதானத்தில் மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியானது பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடந்தது. முதலில் தன்முகமாக வந்த மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன் அடுத்ததாக யானை முகத்துடனும், எருது முகத்துடனும் வந்த சூரனை வதம் செய்தார். அடுத்து சேவல் உருவில் வந்த மகிஷாசூரனையும் வதம் செய்தார். இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் பத்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.