பதிவு செய்த நாள்
14
அக்
2024
01:10
ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அருகே, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் கடந்த, 3ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது. தினமும் மாலை, 5:00 மணிக்கு மரகதாம்பிகை தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவ மூர்த்தி மலர் அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார். இரவு, 7:00 மணிக்கு லலிதசகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஒவ்வொரு நாளும் உற்சவர் அம்மன் காமாட்சி, மீனாட்சி, அன்னபூரணி, மகாலட்சுமி, துர்காதேவி, பள்ளிகொண்டீஸ்வரர், சிவலிங்கம், ஞானசரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடந்த விழா நிறைவடைந்து நேற்று காலை சாந்தி பூஜை நடந்தது. திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபரமேஸ்வரி எல்லையம்மன் கோவிலில், 86ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த, 3ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் இரவு தெப்பத்திருவிழாவுடன் நிறைவு பெற்றது. நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு கோவில் அருகே உள்ள குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் அம்மன் எழுந்தருளி குளத்தை, 9 முறை சுற்றி வந்து அருள்பாலித்தார்.