பதிவு செய்த நாள்
28
அக்
2024
04:10
நாகர்கோவில்; சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக சபரிமலை நடை 30ம் தேதி மாலை திறக்கிறது. மண்டல மகர விளக்கு காலத்தில் சபரிமலை சன்னிதானத்தில் அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டு ஒரு நாள் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதற்காக நாளை மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறப்பார். அன்று வேறு விசேஷ பூஜைகள் எதுவும் இருக்காது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 30ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு நெய் அபிஷேகம் தொடங்கும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் சார்பில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 30ம் தேதி உதயாஸ்தமன பூஜையும், இரவு 7:00 மணிக்கு படி பூஜையும் நடைபெறும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் மண்டல கால பூஜைகளுக்காக நவ., 15 மாலை நடை திறக்கும்.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியுள்ளதாவது: தேவசம்போர்டில் டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு பகுதியாக இணையதளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது, இது விரிவான மாற்றங்களுடன் மண்டல பூஜை காலத்திற்கு முன் அமைக்கப்படும். பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் வைஃபை வசதி செய்வது பரிசீலனையில் உள்ளது. சன்னிதானம், 18ம் படி, கோயில் முற்றம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் அலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.