பதிவு செய்த நாள்
29
அக்
2024
12:10
கொடைக்கானல், அர்ச்சர்களின் தட்டுபணத்தைப் பறிக்கும் இந்து அறநிலைத்துறை துறையின் செயலால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.பழநி முருகன் கோயிலின் உப கோயில்களாக 30-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதில் கொடைக்கானலில் உள்ள குழந்தை வேலப்பர், வில்பட்டி வெற்றிவேலப்பர், குறிஞ்சி ஆண்டவர் கோயில் அடங்கும்.
சில மாதங்களுக்கு முன் இந்து அறநிலைத்துறை காலமுறை ஊதியம் பெறும் அர்ச்சகர்கள் அர்ச்சனை தட்டுகளில் பணம் பெறுவதை உண்டியலில் இடவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன்படி கொடைக்கானலில் உள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அர்ச்சகரின் தட்டில் பக்தர்கள் இஷ்டப்பட்டு காணிக்கை செலுத்தப்படும் பணத்தையும் உண்டியலில் செலுத்த அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். பக்தர்கள் தரப்பில் தாங்கள் சுவாமிக்கு சேவை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் விதமாக பணத்தை சுவாமி சன்னிதானத்தில் வழங்குகிறோம். பணத்தை அர்ச்சர்கள் இந்து அறநிலையத்துறை உத்தரவுப்படி உண்டியலில் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். சாமானிய குடும்பத்தை சேர்ந்த அர்ச்சகர்களுக்கு தாங்கள் விரும்பிக் கொடுக்கும் பணத்தை பெற வழிவகை இல்லாமல் இந்து அறநிலையத்துறையின் செயல்பாடுகள் வருந்தத்தக்கதாக உள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். அதே நிலையில் இங்குள்ள கோயில்களில் வார நாட்களில் வருகை தரும் பக்தர்களின் வருகையை கண்காணித்து அவர்கள் உண்டியலில் பணம் செலுத்த 3 சிறப்பு கண்காணிப்பாளரை நியமித்து கெடுபிடி செய்தும், கோயில் பிரகாரங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைத்து அறநிலைத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை செய்து வருகின்றனர்.
மேலும் அர்ச்சகர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பலருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு துன்பப்படுத்தப்படும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.மேலும் இந்து அறநிலைத்துறையின் இந்த உத்தரவு குறித்து கோயில் பிரகாரங்களில் எவ்வித அறிவிப்பும் செய்யப்படாமல் வெறுமனே அதிகாரிகள் வருகை தரும் பக்தர்களை பணங்களை உண்டியலில் இடவும், நன்கொடையை பிஒஎஸ் இயந்திரம் மூலம் கட்டாயமாக இட வற்புறுத்துகின்றனர். மேலும் வருகை தரும் பக்தர்களிடம் கட்டாயமாக நன்கொடை வசூலிக்கும் நிலை உள்ளது. கோயிலில் அன்றாட பூஜை மற்றும் அபிஷேகம், கோயில் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு பலகைகள் ஏதுமில்லாமல் இந்து அறநிலை துறை இது போன்ற ஈடுபட்டது பக்தர்களை கொதிப்படைய செய்ய உள்ளது.சாமானிய அர்ச்சகர்களுக்கு பக்தர்கள் இஷ்டப்பட்டு செலுத்தும் காணிக்கைகளை வழிப்பறி போன்று இந்து அறநிலைத்துறை பறிப்பது நியாயம் இல்லை என பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானல் பூம்பாறை கோயிலில் மட்டும் இந்நடவடிக்கை தொடர்கிறது. பிற கோயில்களில் இது போன்ற நடவடிக்கை தொடராதது உள்நோக்கமாக உள்ளது. லீலாவதி, மலேசியா : கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலுக்கு இன்று வழிபாட்டிற்கு வந்தபோது கோயில் உண்டியலில் பணம் செலுத்தினேன். தொடர்ந்து அர்ச்சகருக்கும் விருப்பத்தின் அடிப்படையில் பணம் கொடுத்த நிலையில் வாங்க மறுத்துவிட்டார். அதே நிலையில் அப்பணத்தை உண்டியலில் அர்ச்சகர் செலுத்தி விட்டார். இது சம்பந்தமான எவ்வித அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இந்து அறநிலை துறையின் இத்தகைய செயல்பாடு வருத்தமளிக்கிறது.
சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்னடைவில் உள்ள இவர்களுக்கு எங்களது விருப்பத்தின் அடிப்படையில் அர்ச்சனை தட்டில் சன்மானம் வழங்கப்படும் நிலையில் இதை தவிர்ப்பது வேதனை அளிக்கிறது. கோயில் அர்ச்சர்களுக்கு கிடைக்கும் இது போன்ற சிறு தொகையை அரசு பறிப்பது நியாயம் இல்லை.எனது முன்னோர்கள் தொன்று தொட்டு கோயில் வழிபாட்டின் போது அர்ச்சகரின் தட்டில் விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யும் பொழுது சிறு காணிக்கை செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் தான் செலுத்திய நிலையில் இந்து அறநிலைத்துறையின் செயல்பாட்டால் இது புறக்கணிக்கப்பட்டு, பக்தர்களுக்கு மன வேதனையை அளிப்பதாக உள்ளது இதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். மகேஷ்வரன், இந்து முன்னணி ஒன்றிய தலைவர்,கொடைக்கானல் :இந்து அறநிலையத்துறை அர்ச்சகர்கள் தட்டில் பக்தர்கள் வழங்கும் பணத்தை உண்டியலில் திரும்ப செலுத்த வேண்டும் என்ற நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது.பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ள அர்ச்சர்களுக்கு பக்தர்கள் இஷ்டப்பட்டு காணிக்கை அளிக்கப்படும் நிலையில் அதை பறிப்பது நியாயம் இல்லை. தமிழக அரசு பிற மத வழிபாட்டில் தலையீடு செய்வதில்லை. இந்துக்கள் கோயில்களில் இது போன்ற நடவடிக்கை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.பக்தர்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்திய பின்னர் அர்ச்சர்களுக்கு வழங்கும் பணத்தையும் உண்டியலில் அவர்கள் முன்னரே செலுத்துவதால் பக்தர்கள் மனம் நொந்துள்ளனர். இது போன்ற நிலையால் பக்தர்கள் கோயில்களில் காணிக்கை செலுத்துவதை தவிர்த்து வருகின்றனர். இந்து கோயில்கள் மீது மட்டும் இது போன்ற நடவடிக்கை தவிர்க்கப்பட வேண்டும்.இது போன்ற அரசு நடவடிக்கை குறித்து கோயில்களில் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும். இந்து அறநிலைத்துறையின் இத்தகைய செயல்பாட்டை மறுபரிசீலனை செய்ய அரசு முன் வர வேண்டும்.