பதிவு செய்த நாள்
04
நவ
2024
02:11
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கொடி மரம் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதால், நடப்பாண்டு கந்தசஷ்டி சூரசம்ஹார விழா மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெறாது. இருப்பினும் கந்தசஷ்டி விழாவையொட்டி, கடந்த 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை, காலை 7:00 மணி, 9:00 மணி, 11:00 மணி மற்றும் இரவு 7:00 மணிக்கு சுவாமிக்கு லட்சார்ச்சனை நடைபெறும். இதனால், பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் சுற்றிவர அனுமதி இல்லை. வெளிபிரகாரத்தை மட்டுமே சுற்றி வரலாம் என, காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவில் செயல் அலுவலர் கதிரவன் தெரிவித்து இருந்தார். அதன்படி, கோவிலில் 2ம் தேதி முதல் நான்கு கால லட்சார்ச்சனை நடந்து வருகிறது. கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழாவின் மூன்றாம் நாளான இன்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தன. உற்சவர் ஆறுமுகப் பெருமான், வள்ளி, தெய்வானையருடன் ரோஜா, சாமந்தி, மல்லி, முல்லை, அலரி என, பல்வேறு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வெளிபிரகாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவில் பிரகாரத்தை 108 முறை வலம் வந்து முருகப் பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.