பதிவு செய்த நாள்
07
நவ
2024
05:11
அவிநாசி; திருமுருகன் பூண்டி, திருமுருகநாத ஸ்வாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி அடுத்த திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத ஸ்வாமி கோவில் கொங்கேழு சிவஸ்தலங்களில் ஒன்றாக புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோவிலில் கடந்த இரண்டாம் தேதி சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை உள்ளிட்டவைகளுடன் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி இன்று காலையில் திருமுருகநாதர் ஸ்வாமிக்கு பால் அபிஷேகம் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் கந்த சஷ்டி நிகழ்ச்சியில் சண்முகநாத ஸ்வாமி,அன்னையிடம் சக்திவேல் வாங்கி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சூரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் கஜமுகன், பானுகோபன், சிங்கமுகசூரன் ஆகியோரை வதம் செய்த பிறகு இறுதியாக சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் ஸ்வாமி வெற்றி வாகை மாலை சூட்டுதல், சேவல் கொடி சாற்றுதல், ஸ்வாமியை சாந்தப்படுத்தும் விதமாக உற்சவருக்கும். மூலவருக்கும் மஹா அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. நாளை (வெள்ளி) காலை 9 முதல் 10:30 வரை சிறப்பு அபிஷேகத்துடன் அலங்கார பூஜைகளை தொடர்ந்து சண்முகநாதர் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. சூரசம்கார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில்,கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் உற்சவர் முருகப்பெருமான் கஜமுக சூரன், பானு கோபன், சிங்கமுகசூரன் ஆகிய சூரர்களை கோவை மெயின் ரோடு, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் வதம் செய்த பிறகு இறுதியாக கிழக்கு ரத வீதி பகுதியில் சூரபத்மனை வதம் செய்தார். அதனைத் தொடர்ந்து மாலையில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சூரசம்ஹார நிகழ்ச்சியிலும் திருக்கல்யாணத்திலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.