பதிவு செய்த நாள்
08
நவ
2024
10:11
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை 6:00 மணிக்கு மலை அடிவாரம் கிரிவீதியில் நடந்த சூரசம்ஹாரத்தில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷங்களை எழுப்பி தரிசித்தனர். இன்று வள்ளி தேவசேனா சமேத சண்முகர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் நவ., 2ல் துவங்கியது. இதையடுத்து அன்று யானை படிப்பாதை வழியாக கோவில் யானை கஸ்துாரி முருகன் கோவில் சென்றது. விழாவில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்த நிலையில் நேற்று (நவ., 7) அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்க மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்குதல் நடந்தது. இதையடுத்து நேற்று பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சின்னகுமாரசுவாமி சூரசம்ஹரத்திற்காக பாத விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டார். அங்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசுரன், கிழக்கு கிரிவிதியில் பானுகோபன், தெற்கு தெரு வீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் நிற்க சூரசம்ஹாரம் நடந்தது.
பின் முருகன் கோவிலில் இரவு சம்ரோட்சன பூஜை பின் அர்த்தஜாமபூஜை நடந்தது. இன்று காலை 9:30 மணிக்கு முருகன் கோவிலில் வள்ளி, தெய்வானை உடன் சண்முகருக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 8:20 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி, தெய்வானை உடன் முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. பின் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.