திருவண்ணாமலை அண்ணாமலையார் பெரிய தேர் வெள்ளோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2024 10:11
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 70 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணாமலையார் பெரிய தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. அரோகரா முழக்கத்துடன் பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.
திருவண்ணாமலை; உலகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றாக கருதக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 3ம் தேதி அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 64 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், டிசம்பர் மாதம் 13ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் சன்னதி கருவறை அருகே அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதனை தொடர்ந்து அன்று மாலை 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. விழாவில் அண்ணாமலையார் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். அதற்காக, 70 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணாமலையார் பெரிய தேர் வெள்ளோட்டம் இன்று காலை துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். விழாவில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.