பதிவு செய்த நாள்
08
நவ
2024
11:11
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார், வல்லக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் உள்ளிட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலமாக நேற்று நடைபெற்றது.
குன்றத்துார் மலையில் பழமைவாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கு கடந்த 2ம் தேதி கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா துவங்கியது. நேற்று மாலை சூரபத்மனை வதம் செய்ய, முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் மலையில் இருந்து கீழே இறங்கினார். இதை தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு சூரசம்ஹாரம் துவங்கியது. முருகப் பெருமான் படை சூழ, யானை, ஆடு, மாடு, குதிரை, புலி உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை, வேலால் வதம் செய்யும் காட்சி அரங்கேறியது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள், அரோகரா கோஷமிட்டு .முருகனை வழிபட்டனர். அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைகண்ணன், அறங்காவலர்கள் சரவணன், ஞானசேகர், சங்கீதா, ஜெயக்குமார், கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
வல்லக்கோட்டை; ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. ஆறு நாட்கள் நடைபெறும் விழாவில், நாள்தோறும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆறாம் நாள் வியாழக்கிழமையான நேற்று, சஷ்டி மண்டபத்தில் எலுமிச்சை மாலை அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்தார்.
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமிகோவிலில் நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பார்த்தனர். பகல் 12:00 மணிக்கு சரவணப்பொய்கையில் தீர்த்தவாரி நடந்தது. இதில், கந்தப்பெருமான் குளத்தில் நீராடினார். மாலை 6:00 மணிக்கு மேல், கிழக்கு மாடவீதி வரை விரட்டி சென்று கெஜமுகன், பானுகோபன், அஜமுகி, தாருகன், சிங்கமுகன் ஆகியோரை வீரபாகு வேடமணிந்த குழுவினர், சிறுவர்கள் வதம் செய்தனர். அதை தொடர்ந்து, கந்தபெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரபத்மனை விரட்டிச்சென்று வதம் செய்தார். பின், தங்கமயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதைத் தொடர்ந்து இன்று மாலை 6:00 மணிக்கு கந்தப்பெருமான் திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.