பதிவு செய்த நாள்
08
நவ
2024
11:11
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த, 2ம் தேதி துவங்கியது. தினமும் மூலவருக்கு ஒவ்வொரு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று சஷ்டியின் நிறைவு நாளில் அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் தங்ககவசம், தங்கவேல் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு வழக்கம் போல் லட்சார்ச்சனை விழா நடந்தது. மாலை 5:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு, 2,500 கிலோ பல்வேறு வகையான மலர்களால் புஷ்பாஞ்சலி மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
புஷ்பாஞ்சலி ஏன்?; முருகனின் அறுபடை வீடுகளில், திருத்தணி கோவிலை தவிர்த்து மீதமுள்ள ஐந்து கோவில்களில் கந்த சஷ்டி நிறைவு நாளில், சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், திருத்தணி கோவிலில் முருகன் சினம் தணிந்து வள்ளி, தெய்வானையை திருமணம் செய்து சாந்தமுடன் உள்ளதால் சஷ்டி விழாவில் புஷ்பாஞ்சலி நடந்து வருகிறது.