காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பாலாலய உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2024 12:11
காஞ்சிபுரம்; 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருப்பணிகள் மேற்கொள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பாலாலய உற்சவம் நடைபெற்றது. கிழக்கு கோபுரம், மேற்கு கோபுரம், உடையவர் சன்னதிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பாலாலயம் செய்யப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்று இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. கும்பாபிஷேக விழாவிற்கான திருப்பணிகள் நடைபெற உள்ள நிலையில் கிழக்கு கோபுரம் மேற்கு கோபுரம் உடையவர் சன்னதி ஆகியவற்றிற்கு பாலாலய உற்சவம் இன்று அதிகாலையில் நடைபெற்றது. பாலாலய உற்சவத்தை ஒட்டி ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனங்கள் நடத்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து அத்தி மரத்தினால் செய்யப்பட்ட பலகையில் வரையப்பட்ட கோபுரங்களுக்கும் உடையவர் மற்றும் ஆழ்வார்கள் திருஉருவங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தும், யாகசாலை பூஜைகள் செய்தும் மேளதாளங்கள் முழங்க வேதபாராயணங்கள் ஒலிக்க பாலாலய உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பாலாலய உற்சவத்தில் பக்தர்களும் உபயதாரர்களும் பெரும் திரளானோர் கலந்து கொண்டு வரதராஜ பெருமாளை சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.